வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் சுற்றுலா காரை விரட்டிய யானையால் பரபரப்பு
- யானை ஒன்று வால்பாறை-பொள்ளாச்சி நெடுஞ்சாலைக்கு வந்து அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது.
- சுற்றுலா பயணிகள் யானையை கண்டதும் குதூகலம் அடைந்து செல்பி எடுக்க முயன்றனர்.
வால்பாறை:
வால்பாறை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
அவற்றில் பெரும்பாலானவை வாட்டார் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளன. கடந்த வாரம் அந்த வழியாக வந்த ஒரு காரை யானை உடைத்து சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வனத்தை விட்டு வெளியேறிய யானை ஒன்று வால்பாறை-பொள்ளாச்சி நெடுஞ்சாலைக்கு வந்து அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது.
அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் யானையை கண்டதும் குதூகலம் அடைந்து செல்பி எடுக்க முயன்றனர். இதனால் மிரண்ட காட்டு யானை அந்த வாகனத்தை விரட்டியது.
வால்பாறை-பொள்ளாச்சி சாலைக்கு வந்த ஒரு காட்டு யானை, அந்த வழியாக சென்ற காரை துரத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் திரியும் யானைகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.