உள்ளூர் செய்திகள் (District)

காயத்துடன் திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

Published On 2024-06-07 07:04 GMT   |   Update On 2024-06-07 07:04 GMT
  • தேயிலை, காப்பித்தோட்டங்களில் சிறுத்தை நடமாடுவது உறுதியானது.
  • சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஊட்டி:

கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்னுவயல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பகுதியில் முகாமிட்டு வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது அங்குள்ள தேயிலை, காப்பித்தோட்டங்களில் சிறுத்தை நடமாடுவது உறுதியானது.

சிறுத்தை நடக்க முடியாமல் மெதுவாகவே அந்த இடங்களை கடந்து செல்கிறது.

சிறுத்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டு இருக்கலாம் அல்லது வயது முதிர்வு காரணமாக சிறுத்தை நடக்க முடியாமல் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விட்டதால் அந்த சிறுத்தை மனிதர்களை தாக்கும் முன்பு அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கூண்டில் சிக்காத பட்சத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முடிவு செய்துள்ளனர். சிறுத்தை பிடிபடும்பட்சத்தில் அதன் காயத்துக்கு சிகிச்சை அளிக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News