ஆபாச வீடியோ இருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது
- சந்திரசேகரனின் செல்போன் எண் சிக்னல் மூலம் போலீசார் தேடிவந்தனர்.
- தென்காசி போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம், கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவராக சந்திரசேகரன் இருந்து வருகிறார். தற்போது தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பகுதியிலுள்ள திருநகரில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டிற்குள் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்ததாகவும், அப்பொழுது அவரது மனைவி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை பிடிக்க முயற்சி செய்தபோது ஆத்திரத்தில் அவர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் சந்திரசேகரை வெட்டி விட்டு சென்று விட்டதாகவும் புகார் ஒன்றை தென்காசி போலீஸ் நிலையத்தில் அளித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கிய போது, கொள்ளை அடிக்க வந்ததாக கூறப்படும் நபர்கள் சந்திரசேகரின் செல்போனை எடுத்து சென்றதும், அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஒரு கைப்பையை அங்கே விட்டு சென்றதும் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து அவர்கள் விட்டு சென்ற கைப்பையை எடுத்து போலீசார் சோதனை செய்த போது, அவர்கள் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என சந்திரசேகரனின் செல்போன் எண் சிக்னல் மூலம் போலீசார் தேடிவந்தனர்.
அந்த செல்போன் எண்ணின் சிக்னல் மூலம் அவர்கள் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களை பின் தொடர்ந்து சென்ற தென்காசி போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் கூலிப்படை போல் செயல்பட்டதும், அவர்களை தென்காசி பகுதியை சேர்ந்த 2 பேர் இதுபோல் செய்ய சொன்னதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தென்காசி பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற இளநீர் கண்ணன் மற்றும் சக்திமாரி ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் தி.மு.க. ஊராட்சி தலைவரான சந்திரசேகரனிடம், அவர் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசுவது போன்று ஆடியோ இருப்பதாகவும், செல்போன் செயலி மூலம் எடுக்கப்பட்ட வீடியோ உள்ளதாக கூறி சந்திரசேகரனை பணம் கேட்டு மிரட்ட முடிவு செய்து, அதன்படி, கோயம்புத்தூர் கும்பலை இங்கு வந்து வீடியோ மற்றும் ஆடியோக்கள் உள்ளதாக கூறி சந்திரசேகரனை மிரட்டி உள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரச்சினை ஏற்படவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து சந்திரசேகரனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக சக்திமாரி (வயது 47), ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (22), தேனி பகுதியை சேர்ந்த ரிஸ்வான் (22), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மதன்குமார் (20) கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த போத்திராஜ் (30), கோவை பகுதியை சேர்ந்த அருள் ஆகாஷ் (34) மற்றும் முக்கிய குற்றவாளியான தென்காசி பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற இளநீர் கண்ணன் (40) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.