பூட்டிக் கிடந்த வார சந்தை திறந்து விடப்பட்டது- பேரூராட்சி நிர்வாகம், போலீசார் நடவடிக்கை
- சில வியாபாரிகள் நாங்கள் நீண்ட காலமாக இப்பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
- ஒதுக்கப்பட்டுள்ள வார சந்தைக்கான இடத்திற்கு எடுத்துச் செல்லுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்ததையடுத்து அனைத்து வியாபாரிகளும் வார சந்தைக்குள் எடுத்துச் சென்றனர்.
பாப்பிரெட்டிபட்டி.
தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் வாரம் தோறும் வியாழக்கிழமை வாரசந்தை கூடும், இந்த மாவட்டத்தில் பிரபலமான வார சந்தையாகவும், பேரூராட்சிக்கு நல்ல வருவாய் ஈட்டும் சந்தையாகவும் இருந்து வருகிறது.
இதனால் பேரூராட்சி நிர்வாகம் கடந்த பல மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கும் பணியை பல லட்சம் செலவில் செய்திருந்தது, பணிகள் நிறைவடைந்து சில மாதங்களாக பயன்பாட்டிற்கு வராததால் வியாபாரிகள் பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை முழுவதும் கடைகள் அமைத்து போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருந்து வந்தனர்.
இது குறித்து மாலைமலர் செய்தி அண்மையில் வெளி யிட்டிருந்தது, இதையொட்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையும் இணைந்து வார சந்தையை திறந்து வைத்து பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை ஓரம் அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அனைத்தையும், வார சந்தைக்கு ஒதுக்க ப்பட்டுள்ள இடத்திற்கு எடுத்து செல்லுமாறு வியாபாரிகளுக்கு வலியுறுத்தினர்.
சில வியாபாரிகள் நாங்கள் நீண்ட காலமாக இப்பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார சந்தைக்கான இடத்திற்கு எடுத்துச் செல்லுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்ததையடுத்து அனைத்து வியாபாரிகளும் வார சந்தைக்குள் எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் வாரச்சந்தை புதுப்பிக்க ப்பட்டுள்ள பகுதிகளில் சிலர் இடங்களை பிடித்து வைத்துக்கொண்டு வியாபாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், கொடுத்தால் மட்டும்தான் இடம் ஒதுக்கி தருவோம் என மிரட்டி வருவதாகவும் வியாபாரிகள், காவல் துறை, பேரூராட்சி அதிகாரிகளிடம் குற்றம் சாட்டினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது பொம்மிடி காவல் உதவி ஆய்வாளர்கள் சக்திவேல், மாரப்பன் மற்றும் போலீசார் போரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இச் சம்பவத்தால் பொம்மிடி பேரூராட்சி வார சந்தை முக்கிய சாலையில் காலை முதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.