தக்காளி விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி
- தக்காளி சாகுபடி குறைந்ததே விலை உயர்வுக்கான முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
- மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடவு செய்யப்பட்ட தக்காளி செடிகள் வெயிலின் தாக்கம் காரணமாக, விவசாய நிலங்களில் கருகியது.
தருமபுரி,
தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் பெரும் அளவில் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
விவசாயிகளிடமிருந்து அறுபது ரூபாய்க்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, உழவர் சந்தையில் கிலோ 80 ரூபாய்க்கும், வெளிச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.100 முதல் 130 வரை விற்பனையாகிறது.
தக்காளி சாகுபடி குறைந்ததே விலை உயர்வுக்கான முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பேகாரஅள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்டப் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி சாகுபடி செய்வது வழக்கம்.
இப்பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளி பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள பிரத்யேக தக்காளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.
இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தக்காளி பழங்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
தக்காளி விலை உயர்வுக்கான காரணம் குறித்து தருமபுரி மாவட்டம், மத்தான் கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி சேகர் என்பவரிடம் கேட்டபோது, தக்காளி விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், செடிகளில் போதுமான அளவு காய்ப்பு திறன் இல்லாததால் குறைந்த அளவிலேயே தக்காளி மகசூல் கிடைக்கின்றது.
இந்த ஆண்டு கோடை வெயில் பிப்ரவரி மாதத்தில் தொடங்கியதால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடவு செய்யப்பட்ட தக்காளி செடிகள் வெயிலின் தாக்கம் காரணமாக, விவசாய நிலங்களில் கருகியது.
இதனால் தக்காளி நடவு செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதன் காரணமாகத் தான் தக்காளி நடவு செய்ய விவசாயிகள் முன் வர வில்லை. சாகுபடி பரப்பு குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்து உள்ளது என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது வெயிலில் இருந்து தக்காளி செடிகளை காப்பாற்ற மாற்று யோசனை செய்து தற்போது தக்காளியை அறுவடை செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் கடந்த மார்ச் மாதத்தில் தக்காளி நடவு செய்தபோது வெயில் காரணமாக வயலில் கருகியது.
அதன் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியிலிருந்து 12,000 எண்ணிக்கையிலான தக்காளி செடிகளை வாங்கி வந்து நடவு செய்தேன்.
வெயிலின் காரணமாக தக்காளிச் செடிகள் காய தொடங்கியதை அடுத்து கால்நடைத் தீவனத்திற்கு பயன்படுத்தப்படும் மக்காச்சோள பயிர்களை விதைத்ததால் வேகமாக வளர்ந்து தக்காளி செடிகளுக்கு நிழல் ஏற்படுத்தும் என எண்ணி மக்காசோள பயிர்களை இடையிடையே விதைத்ததால் அது குறுகிய காலத்தில் வளர்ந்து நிழல் கொடுத்ததால் அருகில் இருந்த தக்காளிச் செடிகள் காயாமல் நன்றாக வளர்ந்து என தெரிவித்தார்.
மேலும், தற்போது செடிகளில் பழங்கள் பழுக்கத் தொடங்கியதை அடுத்து நிழலுக்காக நடப்பட்ட சோள தட்டுகளை அறுத்து அகற்றியதாகவும் கூறினார்.
தக்காளி விலை இன்னும் இரண்டு மாதத்திற்கு குறையாது என்றும், தற்பொழுது மழைக்காலம் தொடங்கியதால் விவசாயிகள் இனி வரும் காலங்களில் தக்காளி நடவு செய்து அதன் மூலம் கிடைக்கும் பழங்களால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். ஆனால் அவருடைய தனி திறமையால் தக்காளி செடிகளை காப்பாற்றிய சேகர், தற்போது லாபத்தை அள்ளி வருகிறார்.