மரக்காணத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மீட்பு குழு தயார்
- தமிழக அரசு சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
- இயக்குனர் ரவி ஏற்பாடு செய்துள்ள மீட்பு பணிகள் குறித்த விவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தொடங்கி உள்ளது. இந்த பருவமழையானது பல இடங்களில் கொட்டி தீர்த்து வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி கடற்கரை ஓரம் அமைந்துள்ளது. இதனால் இந்த பருவ மழையில் ஏற்படும் சேதங்களை தடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ரவி மரக்காணம் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள மீட்பு பணிகள் குறித்த விவரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் ஏற்படும் சேதங்களை தடுக்க தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கடலோர மாவட்டங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் மரக்காணம் பகுதியிலும் பருவ மழையை எதிர்கொள்ள மீட்பு பணிகள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த ஆய்வினைத் தொடர்ந்து கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்யப் போகிறேம். இவ்வாறு கூறினார். அப்பொழுது தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் வீரர்கள் உடன் இருந்தனர்.