உள்ளூர் செய்திகள் (District)

துப்பாக்கியால் சுட்டு ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

Published On 2024-09-26 05:24 GMT   |   Update On 2024-09-26 05:24 GMT
  • நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கடுமையாக பாதிப்பு.
  • இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

பாம்பன்:

தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மற்றும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.

அவர்கள் பாக்ஜலசந்தி உள்ளிட்ட இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்புகிறார்கள். இதற்கிடையே எல்லை தாண்டி வந்தாக கூறி அண்டை நாடான இலங்கையை சேர்ந்த கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களின் பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுளை பறிமுதல் செய்வதும் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.

அதிலும் சமீப காலமாக சிறைபிடிக்கப்படும் மீனவர்களுக்கு இலங்கை கோர்ட்டு கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதுடன், அதனை கட்டத்தவறினால் கூடுதல் சிறைவாசம் அனுபவிக்க உத்தரவிடுகிறது.

இதனால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு மாற்று தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையே நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இலங்கையில் சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. எனவே மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் பாரம்பரிய இடங்களில் சுமூகமான முறையில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத்தரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவர்கள் பாதியில் கரை திரும்பியுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியில் இருந்து நேற்று காலை 470 விசைப் படகுகளில் 1,800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்வளம் நிறைந்த பகுதியில் வலைகளை விரித்திருந்தனர்.

வழக்கமான நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தான் இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்கு வந்து அவர்களை எச்சரிப்பதும், சிறைபிடிப்பதும் நடக்கும்.

ஆனால் நேற்று ஒரே நேரத்தில் 6 ரோந்து கப்பலில் வந்த கடற்படையினர் தமிழக மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றி வளைத்தனர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு புறப்பட தயாரானார்கள். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தங்களிடமிருந்த எந்திர துப்பாக்கிகளை உயர்த்திப்பிடித்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

எங்கள் நாட்டின் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க வந்தால் உங்களையும் சுட்டுத்தள்ளுவோம் என்று எச்சரித்துள்ளனர்.

உடனடியாக ராமேசுவரம் மீனவர்கள் அங்கு தொடர்ந்து மீன்பிடிக்கும் சூழ்நிலை இல்லாததால் பாதியிலேயே புறப்பட்டனர்.

ஒரு சில படகுகளில் இருந்த மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் கடலில் வீசியிருந்த வலைகளை தாங்களே அறுத்துக்கொண்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்று கரையை நோக்கி படகை செலுத்தினர்.

ஒரே பகுதியில் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் மீன்பிடித்த நிலையில் சில படகுகள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடத்திற்கு சென்றது. 15-க்கும் மேற்பட்ட படகுகளை சேர்ந்த மீனவர்கள் கரை திரும்பினர்.

இதனால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறி புலம்பினர். ஆனால் இதுதொடர்பாக அவர்கள் போலீசில் எந்தவித புகாரும் தெரிவிக்க வில்லை.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபர் பதவியேற்ற ஒரு சில நாட்களில் அந்நாட்டு கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை குறிவைத்து அராஜக செயல்களில் ஈடுபடுவது பெரும் கொந்தளிப்பையும், பதட்டத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ஏற்கனவே புரட்டாசி மாதம் பிறந்துள்ள நிலையில் மீன்களுக்கு போதிய விலை கிடைக்காமல் மீனவர்கள் தவித்துவருகிறார்கள். இதற்கிடையே நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்களை மத்திய, மாநில தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News