ஒட்டன்சத்திரம் தண்ணீர் திட்டத்திற்கு எதிரான போராட்டம் - கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் ஆதரவு
- பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது.
- பி.ஏ.பி., திட்டம் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும்.
பல்லடம் :
பி.ஏ.பி., பாசனத் திட்டத்தில் ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது. பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் சூழ்நிலையில், அணையில் தண்ணீர் இருக்கும்போதே, தண்ணீர் இல்லை என்று கூறி அதிகாரிகள் பாசனத்துக்கான தண்ணீரை நிறுத்துகின்றனர்.
இந்த சூழ்நிலையில் 150 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு எவ்வாறு தண்ணீர் வினியோகிக்க முடியும் ? பி.ஏ.பி., பாசன விவசாயிகள் ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறையில் தவித்து வருகின்றனர்.இதில் ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் வினியோகித்தால், பி.ஏ.பி., திட்டம் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும்.
எனவே பி.ஏ.பி., பாசன விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்தை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். இதை கண்டித்து, வரும் ஜூன் 27-ந் தேதி அன்று பொள்ளாச்சி, உடுமலையில் நடக்கவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம், மற்றும் கடையடைப்பு போராட்டத்துக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு அளித்து திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.