இந்திய-இலங்கை கடல் எல்லையில் மத்திய அமைச்சர் கப்பலில் சென்று ஆய்வு
- சர்வதேச யோகா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்றார்.
- இந்திய கடலோர காவல்படையினர் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து கடற்படை முகாமிற்கு மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை அலுவலகம் சென்றார் அங்கு அவருக்கு வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதன் பின்னர் ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் பாக்நீரினை கடல் இந்திய-இலங்கை எல்லைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து, நேற்று காலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று ஸ்படிகலிங்க தரிசனம் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டார். இதன் பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்றார்.
பின்னர் ஹோவர் கிராப்ட் கப்பலில் மன்னார் வளைகுடா கடல் இந்திய இலங்கை எல்லையில் அமைந்துள்ள 5-ம் மணல் தீடைக்கு சென்று அங்கு நிறுவப்பட்டுள்ள இந்திய-இலங்கை பெயர் பலகை மற்றும் இந்திய தேசிய கொடியை பார்வையிட்டார்.
மேலும் மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் காலங்களில் இந்திய கடலோர காவல்படையினர் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இதன் பின்னர் உச்சிப்புளி சென்று அங்கிருந்து ராணுவ விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.