உள்ளூர் செய்திகள்

தாழங்குடா மீனவர்களை தாக்கி மீன்களை பறித்து சென்ற வீராம்பட்டினம் மீனவர்கள்

Published On 2024-06-22 06:09 GMT   |   Update On 2024-06-22 06:09 GMT
  • புதுவை மாநிலம் நல்லவாடு பகுதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
  • போலீசார், தாழங்குடா மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

கடலூர்:

கடலூர் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் சஞ்சய் குமார், இளம் பரிதி, வடிவேல், கனகராஜ் ஆகியோர் பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் புதுவை மாநிலம் நல்லவாடு பகுதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு படகில் 4 பேர் இவர்களது படகு அருகில் வந்தனர். பின்னர் தாழங்குடா மீனவர்களிடம் குடிநீர் வேண்டும் என கேட்டு, தாங்கள் கொண்டு வந்த காலி பாட்டிலை வழங்கினார்கள். மேலும், நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என கேட்டனர். நாங்கள் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் என பதில் கூறிவிட்டு, பாட்டிலில் நீரை நிரப்பி கொண்டிருந்தனர்.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த 4 பேரும், நாங்கள் புதுவை மாநிலம் வீராம்பட்டினம் மீனவர்கள், இந்த பகுதியில் வந்து நீங்கள் ஏன் மீன்பிடிக்கிறீர்கள்? மீன்பிடிப்பதற்கு யார்? உங்களுக்கு அனுமதி அளித்தனர்? உங்கள் படகை சிறை பிடித்து எங்கள் ஊருக்கு இழுத்து செல்ல போகிறோம் என கூறினர். அப்போது திடீரென்று அவர்களிடமிருந்த கயிறை தாழங்குடா மீனவர்களின் படகில் கட்டினார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாழங்குடா மீனவர்கள், எங்கள் படகில் எதற்கு கயிறு கட்டுகிறீர்கள்? கடலில் மீன் பிடிப்பதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என கேட்டனர். அப்போது வீராம்பட்டினம் மீனவர்கள் சஞ்சய்குமாரை தாக்கினர். இதில் சஞ்சய் குமார் பலத்த காயமடைந்தார். மேலும், தாழங்குடா மீனவர்களின் படகில் இருந்த மீன்களை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சிடைந்த தாழங்குடா மீனவர்கள், தங்கள் படகில் கட்டப்பட்டிருந்த கயிறை அறுத்து விட்டு, பின்னர் அங்கிருந்து படகில் தப்பி கடலூர் பகுதிக்கு வந்தனர். பலத்த காயமடைந்த சஞ்சய்குமாரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தகவல் அறிந்த போலீசார், தாழங்குடா மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், இதில் சம்மந்தப்பட்ட வீராம்பட்டினம் மீனவர்கள் யார்? என்பது குறித்து கடலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News