உள்ளூர் செய்திகள்

விழாவை யொட்டி மின்விளக்குகளால் ஜொலிக்கும் பேராலயம்.

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

Published On 2023-08-28 09:33 GMT   |   Update On 2023-08-28 09:33 GMT
  • ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விழா நடைபெறும்.
  • சிறப்பு பாடல், கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

நாகப்பட்டினம்:

கீழ்திசை நாடுகளின் லூர்துநகரம் என அழைக்கப்ப டும் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கும்.

இந்தாண்டு பெருவிழா நாளை (29-ந்தேதி) கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் கொடி புனிதம் செய்யப்பட்டு ஊர்வலத்துக்கு பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து ஆலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், தமிழ் திருப்பலி நடைபெறும்.

வரும் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், ஆலயம் மேல் கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலி நடக்கிறது.

வரும் 1-ந்தேதி மாலை சிலுவை பாதையும், 7-ந்தேதி மாலை தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபமும் நடைபெறும் அதை தொடர்ந்து சிறப்பு பாடல் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

8-ந்தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டா டப்படுகிறது.

காலை 8 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

இரவு 8 மணிக்கு பெரிய தேர்பவனி நடக்கிறது. இதன்பின்பு கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம், ஆலய நிர்வாகம், வேளாங்கண்ணி பேரூராட்சி, போலீஸ்துறையினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News