எழும்பூர் ரெயில் நிலையத்தை உலக தரத்துக்கு மேம்படுத்தும் பணிகள் தீவிரம்
- மறுசீரமைப்பு பணிகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளன.
- பூமிக்கு அடியில் கம்பிகளை பதித்து, அடித்தளம் போடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு ஏற்ப மேம்படுத்துவதற்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 50 வருடங்களில் ரெயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு எழும்பூர் ரெயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணிகள் ரூ.734.91 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன.
இதற்காக எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. மேலும் அங்கிருந்த மரங்களும் அகற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அடித்தளம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியது. எழும்பூர் ரெயில் நிலையத்தை ஒட்டி காந்தி இர்வின் சாலை பக்கமும், பூந்தமல்லி சாலை பக்கமும் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் ஆகியவை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றன.
இந்தப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. காந்தி இர்வின் சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக, அடித்தள கம்பிகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.
ரெயில் நிலையத்தை ஒட்டி இருந்த பார்சல் அலுவலகம் இடிக்கப்பட்டுவிட்டது. இங்கு அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க அடித்தள பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்கு 2 தளங்கள் வரை கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடர்பாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளன. எழும்பூர் ரெயில் நிலையத்தில் காந்தி - இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இதற்காக பூமிக்கு அடியில் பல அடி ஆழத்துக்கு கம்பிகளை பதித்து, அடித்தளம் போடப்பட்டுள்ளது. பூந்தமல்லி சாலை பக்கத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் வணிக வளாகத்துக்காக, கட்டிடம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர்ந்து விரைவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.