உள்ளூர் செய்திகள்

மாஞ்சோலை பகுதிகளில் ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு தொழிலாளர்கள் வைத்த பேனர்

Published On 2024-07-17 07:15 GMT   |   Update On 2024-07-17 07:15 GMT
  • தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
  • குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளில் ஊர் பொதுமக்கள் பெயரில் பேனர் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டில் சுமார் 550-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் பாம்பே பர்மா நிறுவனத்தின் குத்தகை காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தேயிலை தோட்டத்தை மூடப்போவதாக தொழிலாளர்களிடம் தெரிவித்தது.

அதன் பின்னர் தொழிலாளர்களிடம் கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்றதாகவும், அங்கு வசிக்கும் மக்களையும் வெளியேற உத்தரவிட்டதாகவும் தொழிலாளர்கள் புகார் கூறினர்.

இந்த சம்பவங்களை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், குத்தகை காலம் முடிவடையும் வரை மாஞ்சோலையில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து மறு உத்தரவு வரும்வரை தொழிலாளர்கள் அங்குள்ள குடியிருப்புகளில் தங்கி கொள்ள தேயிலை தோட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதற்கிடையே தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்தி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று மாஞ்சோலை வனப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளில் ஊர் பொதுமக்கள் பெயரில் பேனர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசுக்கு வைக்கும் வாழ்வாதார கோரிக்கைகள் என்ற தலைப்பில் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அதில், மாஞ்சோலை எஸ்டேட்டுகளை அரசு எடுத்து நடத்த வேண்டும், 10 ஏக்கர் வீதம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாஞ்சோலையில் நிலம் வழங்க வேண்டும், தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News