தென்காசியில் கேக் சாப்பிட்ட சிறுமிக்கு உடல்நலக்குறைவு - பெற்றோர் அதிர்ச்சி
- கேக் கெட்டு போனதை பார்த்து குழந்தைகளின் தாய் அதிர்ச்சி.
- குழந்தைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவருக்கு ஸ்ரீரச்சனா மற்றும் நிஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் குழுந்தையின் பிறந்தநாளை ஒட்டி, பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அய்யங்கார் பேக்கரியில் கேக் வாங்கி கொடுத்து, பிறகு அங்கிருந்து சென்னை திரும்பியுள்ளார்.
பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கேக்கை வெட்டிய குழந்தைகள், அதனை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் கேக் கெட்டு போய் இருந்ததை பார்த்து குழந்தைகளின் தாய் அதிர்ச்சி அடைந்தார். கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில், குழந்தைக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. உடனே குழந்தைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
கேக் கெட்டு போன விஷயம் தொடர்பாக குழந்தைகளின் தந்தை பேக்கரியை தொடர்பு கொண்ட பேசியுள்ளார். இதற்கு பதில் அளித்த பேக்கரி நிறுவனம், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் நடந்தேரிய தவறுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதாக தெரிவித்து இருக்கிறது. எனினும், இதை ஏற்க மறுத்த குழந்தைகளின் தந்தை பேக்கரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இது தொடர்பாக தந்தை அளித்த புகாரின் கீழ் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேக்கரியில் சோதனை நடத்தினர். சோதனையில் சுமார் 50 கிலோ கெட்டுப் போன இனிப்பு மற்றும் தின்பண்டங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பேக்கரிக்கு அபராதமும், நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.