நல்லாற்றில் வரும் கழிவுகளால் நஞ்சராயன்குளம் பாதிக்கும் அபாயம்
- நல்லாற்றில் வரும் கழிவுகளால் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
- மழைபெய்யும் காலங்களில் கழிவுகள் நஞ்சராயன் குளத்துக்கு அடித்துச்செல்லப்படும் அபாயம் உள்ளது.
அவிநாசி :
அவிநாசி, திருமுருகன்பூண்டி பகுதிகளை கடந்து வரும் நல்லாறு மாநகராட்சி பகுதியில் நஞ்சராயன் குளத்தில் சேர்கிறது. நஞ்சராயன் குளம் நிலத்தடி நீர் பாதுகாப்பு மையமாக இருந்தாலும் நல்லாற்றில் வரும் கழிவுகளால் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குளத்தை கவனமாக பாதுகாத்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது. அவிநாசி, பூண்டி பகுதிகளில் இருந்து நல்லாறு வழியாக மாநகராட்சிக்குள் கழிவுநீர் மட்டும் வந்து கொண்டிருந்தது.
தற்போது திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அவிநாசி ரோட்டை நல்லாறு கடந்து வரும் இடத்தில் குப்பை கிடங்கு உருவாகிவருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்படும் ஓட்டல்கழிவு, உணவு பொருள் விற்கும் கடைகளின் கழிவுகள், கட்டுமான பொருள் கழிவுகள் என பலதரப்பட்ட கழிவுகளும், நல்லாறுக்குள் நேரடியாக கொட்டப்படுகிறது.ஆரம்பத்தில் கரையில் மட்டும் கொட்டிய நிலை மாறி தற்போது ஆற்றுக்குள் கழிவுகளை கொட்டுகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் மழைபெய்யும் காலங்களில் கழிவுகள் நஞ்சராயன் குளத்துக்கு அடித்துச்செல்லப்படும் அபாயம் உள்ளது.