செஞ்சியில் பரபரப்பு நிலத் தகராறில் விவசாயி அடித்துக் கொலை
- செஞ்சியில் பரபரப்பு நிலத் தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
- ஏலம் முறையினால் நிலம் கைவிட்டு மாறிப்போனதால் ஆத்திரத்தில் இருந்த தர்மராஜுக்கும் அரங்க நாதனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குறிஞ்சிப்பை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 70) விவசாயி அதே பகுதியில் பட்டாபிராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 2.77 ஏக்கர் நிலத்தை ஆண்டு தோறும் டெண்டர் முறையில் ஏலம் விடுவார்கள். தற்போது டெண்டர் முறையில் விடப்பட்ட அந்த நிலத்தை தர்மராஜ் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மறு ஏலம் விடப்பட்டது. அந்த மறு ஏலத்தில் அதே பகுதியை சேர்ந்த அரங்கநாதன் என்பவர் அதிகமான தொகைக்கு கேட்டதால் அவருக்கு நிலம் டெண்டர் முறையில் விடப்பட்டது.
இன்று காலை அரங்க நாதன் அந்த நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கு தர்மராஜ் இருந்தார். நடைபெற்ற டெண்டர் ஏலம் முறையினால் நிலம் கைவிட்டு மாறிப்போனதால் ஆத்திரத்தில் இருந்த தர்மராஜுக்கும் அரங்க நாதனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அந்த வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதில் அரங்கநாதன் தர்மராஜை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே தர்மராஜ் இறந்தார். இது குறித்த தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் டி.எஸ்பி. பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த தர்மராஜின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அரங்கநாதனை தேடி வருகின்றனர்.