தமிழகத்தில் எப்போதும் திராவிட ஆட்சி தான் நடக்கும்- அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
- மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக அரசு விழாவில் கலந்து கொள்ள 7-ந்தேதி நெல்லை வருகிறார்.
- கன்னியாகுமரியில் இருந்து நெல்லை வரும் அவருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
நெல்லை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள்(புதன்கிழமை) நெல்லை வருகிறார். 8-ந்தேதி காலை நெல்லை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்கும் அவர் நலத்திட்ட உதவிகள், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்து முடிந்த பணிகளை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
இதையொட்டி நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-
மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று முதல்முறையாக அரசு விழாவில் கலந்து கொள்ள 7-ந்தேதி நெல்லை வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து நெல்லை வரும் அவருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அன்று இரவு தாழையூத்தில் தங்கும் அவர், மறுநாள் காலை (8-ந்தேதி) நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற உள்ள விழாவில் கலந்து கொள்கிறார். நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுமார் ரூ.330 கோடி மதிப்பில் சுமார் 29 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். தமிழகத்தில் 88 சதவீதம் பேர் திராவிட இயக்க மக்கள் தான் உள்ளனர். தமிழகத்தில் திராவிட ஆட்சிதான் எப்போதும் நடக்கும். வேறு யாரும் கால் ஊன்ற முடியாது.
திராவிட இயக்கத்தின் ஒரே தலைவராக நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உள்ளார்.
பெண்களுக்கு 50 சதவீதமும் பொறுப்புகள் அளித்து முன்மாதிரி கட்சியாக தி.மு.க. விளங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.