என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் நகைகள்-ரூ.1½ லட்சம் கொள்ளை
- வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
- தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தக்கலை:
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள சுவாமியார் மடத்தை அடுத்த புலிப்பணம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் மனோஜ் (வயது 34), என்ஜினீயர்.
இவர் தற்போது கோவையில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். புலிப்பணத்தில் உள்ள வீட்டில் ராதாகிருஷ்ணனும் அவரது மனைவி சந்திரகலாவும் வசித்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மனோஜ், சொந்த ஊருக்கு வந்தார். தொடர்ந்து தந்தையை சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கேயே தங்கி சிகிச்சை பெற வேண்டி இருந்ததால், சந்திரகலாவும் சென்று விட்டார்.
இதனால் அவர்களது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதனை பார்த்தவர்கள் மனோஜுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து பார்வையிட்டனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த 35 பவுன் நகைகைள், ரூ.1½ லட்சம் மற்றும் ஒரு வெள்ளி குத்துவிளக்கு கொள்ளை போயிருப்பதாக தக்கலை போலீசில் மனோஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.