உள்ளூர் செய்திகள்

திருமாவளவன் தி.மு.க.வுக்கு ஏதோ சொல்ல வருகிறார்-வானதி சீனிவாசன்

Published On 2024-09-11 06:31 GMT   |   Update On 2024-09-11 06:31 GMT
  • தமிழகத்தில் பா.ஜ.க அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது.
  • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

கோவை:

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மதுவை ஒழிக்க வலியுறுத்தி பா.ஜ.க பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மாநாடுகளை நடத்தி உள்ளது. கோவையில் கூட டாஸ்மாக் கடைகளை மூட தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

திருமாவளனுக்கு தி.மு.க. கூட்டணியில் என்ன பிரச்சனை? என்று தெரியவில்லை. வேங்கைவயல் சம்பவம் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல், குறிப்பாக மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் திருமாவளவன் தனது கட்சி சார்பில் நடக்கும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இப்படி அழைப்பு விடுத்துள்ளதன் மூலம் தான் ஒரு புதிய அரசியல் சக்தி என்பதை நிரூபிக்கவோ அல்லது தி.மு.கவுக்கு இந்த மாநாட்டின் மூலம் ஏதோ சொல்ல வருகிறார் என்று தான் நினைக்கிறேன்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் என்பது தமிழகத்திற்கு நல்லது கொடுத்தால் அதனை நாங்கள் நிச்சயமாக வரவேற்கிறோம். கொங்கு மண்டல வளர்ச்சிக்கு பா.ஜ.கவும், மத்திய அரசும் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. கொங்கு மண்டலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.

தமிழகத்தில் பா.ஜ.க அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது. தற்போது பா.ஜ.கவில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞர்களும், பெண்களும் பா.ஜ.கவில் அதிகளவில் சேர்ந்து வருகிறார்கள்.

கார் பந்தயத்தை மாநில அரசு ஊக்கப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்பாடுத்தாத வகையில் அது அமைய வேண்டும். கோவைக்கு எந்த நல்ல திட்டத்தை கொண்டு வந்தாலும் நாங்கள் அதனை வரவேற்போம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிப்பதில்லை. தற்போது வந்த விநாயகர் சதுர்த்திக்கு கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.

வாக்குவங்கிக்காக ஒரு மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்வது, இன்னொரு மதத்திற்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது. இதுதான் சமூகநீதியா. ஒரு மாநில முதல்வர் என்பவர் மாநிலத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.

ராகுல்காந்தி இந்தியாவில் இருந்தாலும், அமெரிக்காவில் இருந்தாலும் ஏதாவது சம்பந்தமில்லாமல் தான் பேசி கொண்டிருப்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News