திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் சேவை தொடக்கம்
- ரெயிலில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.
- ரெயில் நிலையங்களில் ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் வேதார ண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் போக்குவரத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது. மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக ரூ.480 கோடி மதிப்பீட்டில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அதனை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் மணீஷ் அகர்வால், செல்வராஜ் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து, ஓ.எஸ் மணியன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், நகராட்சி தலைவர் கவிதா பாண்டியன், வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் அகஸ்தியம்பள்ளிக்கு புறப்பட்ட ரெயிலுக்கு கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர். அந்த ரெயிலில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.
கரியாப்பட்டினம், குரவப்புலம், தோப்புத்துறை, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி ஆகிய ரெயில் நிலையங்களில் ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அந்தந்த ரெயில் நிலையங்களில் இனிப்பு வழங்கப்பட்டது.இந்த ரெயிலானது, தினசரி காலை 6 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு 6.45 மணிக்கு அகஸ்த்தியம் பள்ளியையும், மீண்டும் காலை 7 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டியை காலை 7.45 மணிக்கும் வந்தடையும். அதேபோல், மாலை 6 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்தும், மீண்டும் 7 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்தும் இந்த இயக்கப்படுகிறது.