"இது உனது மகளே இல்லை" என கூறியதால் ஆத்திரம்: மகளுடன் வந்த தந்தை தாசில்தார் அலுவலகம் முன்பு தர்ணா
- பேசிய வருவாய் ஆய்வாளர் சொந்த அலுவல் காரணமாக வெளியே இருப்பதாகவும், நாளை வருகிறேன் என கூறியுள்ளார்.
- சத்தியசீலன் போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்திரனிடம் சென்று முறையிட்டுள்ளார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 42).
இவரது மகள் 12-ம் வகுப்பு தேர்வு முடித்துவிட்டு கல்லூரிக்காக விண்ணப்பம் செய்து வருகிறார்.
இந்நிலையில் விண்ணப்பத்திற்கு முதல் பட்டதாரி சான்று தேவைப்படுவதால், கையொப்பம் பெற போச்சம்பள்ளி வருவாய் அலுவலகத்திற்கு சத்தியசீலன் தனது மகளுடன் வந்தார். அங்கு வருவாய் ஆய்வாளர் இல்லாததால், அலுவலகத்தின் வெளியே எழுதப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது பேசிய வருவாய் ஆய்வாளர் சொந்த அலுவல் காரணமாக வெளியே இருப்பதாகவும், நாளை வருகிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து சத்தியசீலன் போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்திரனிடம் சென்று முறையிட்டுள்ளார்.
தாசில்தாரின் உத்திரவின் பேரில் அங்கு வந்த வருவாய் ஆய்வாளர், இந்த விண்ணப்பத்தில் கையொப்பம் போட முடியாது, இது உனது மகளே இல்லை என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியசீலன் தனது உறவினர்களுடன் வருவாய் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். விபரம் அறிந்து வந்த போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்திரன் மற்றும் போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் அதிகாரிகள் சத்தியசீலன் கொண்டு வந்த மனுவில் கையொப்பம் பெற்ற பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.