மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள் மூழ்கியது
- ஒரு மூட்டை உரம் ரூ.1,550 என்று விற்கும் சூழலில் அனைத்தும் வீணாகி விட்டது.
- வாழைகளும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊட்டி
கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் நேற்று திடீரென பலத்த மழை கொட்டியது. சுமார் அரை மணி நேரம் மட்டுமே பெய்த மழையால் செருமுள்ளி, கீச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்தது.
இந்த நிலையில் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதல் பரவலாக வெயில் காணப்பட்டது. தொடர்ந்து லேசான சாரல் மழை அவ்வப்போது பெய்தது. மாலை முதுமலை ஊராட்சி பகுதியில் திடீரென கனமழை பெய்தது. தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு விவசாய நிலங்களை சூழ்ந்தது.
இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் மூழ்கியது. இதனிடையே விவசாயிகள், பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால் பயிர்களுக்கு அளித்த உரமும் தண்ணீரில் அடித்து சென்றது. இதனால் விவசாயிகள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- முதுமலை ஊராட்சியில் பெய்த மழையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் நீரில் மூழ்கியது. இதனால் வாழைகளும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாய நிலத்தில் போட்டிருந்த உரமும் அடித்து செல்லப்பட்டது. ஒரு மூட்டை உரம் ரூ.1,550 என்று விற்கும் சூழலில் அனைத்தும் வீணாகி விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.