குறவன் சாதி சான்றிதழ் கேட்டு 7-வது நாளாக நூதன போராட்டம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- அ.தி.மு.க.வினர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா கொரட்டி அருகே உள்ள பஞ்சனம்பட்டி, எலவம்பட்டி, கிராமம் மற்றும் நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் குறவன் இனத்துக்கு பட்டியலின வகுப்பு (எஸ்சி) சான்றுக்கு ஆன்லைன் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட அனைவருக்கும் குறவன் எஸ்சி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரி தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி பின்னர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
தொடர்ந்து மாணவ மாணவிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் கண்ணை கட்டி தவளை போல் தவழ்ந்து வந்து உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் நேற்று 6,வது நாளாக தூக்கு கயிறு மாட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அதிமுக கட்சியை சேர்ந்த நகரச் செயலாளர் டி.டி.குமார் தலைமையில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என் திருப்பதி, ஒன்றிய செயலாளர் செல்வம், தொகுதி செயலாளர் கே. எம். சுப்பிரமணியம், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் தாலுகா அலுவலகம் வந்து தாசில்தார் சிவப்பிரகாசம் வருவாய்த் துறையினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் போராட்டக்காரர்களிடம் நகர செயலாளர் டி.டி. குமார் பேசியபோது:
குறவன் சாதி சான்றிதழ் அதிமுக ஆட்சியில் கேட்டிருந்தால் தாங்கள் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மூலம் கூறி அதற்கான நடவடிக்கை எடுத்து வழங்கி இருப்போம், தங்களுக்கு சான்றிதழ் கிடைக்க அதிமுக சார்பில் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி கவனத்திற்கு எடுத்துச் சென்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என ஆதரவு தெரிவித்து, போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்துச் சென்றனர். தொடர்ந்து ஜாதி சான்றிதழ் கேட்டு தூக்கு கயிறு மாட்டி போராட்டம் நடத்தினார்கள்.
நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், ரம்பா கிருஷ்ணன், டிடிசி சங்கர், ஆர் நாகேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.