கோவில் திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள்
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட நாயனசெரு அடுத்த மலையடிவாரம் பகுதியில் ஸ்ரீ நொண்டி மாரியம்மன் கேவில் திருவிழா நேற்று நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று மாலை தாரை தப்பட்டையுடன் சாமி ஊர்வலம் முக்கிய வீதிகளில் வழியாக சென்று கோவில் வந்தடைந்தது.
அதன் பிறகு பக்தர்கள் தீ மிதித்தும், முதுகு தேர் இழுத்தல், கரகம் எடுத்தும், நெஞ்சின் மீது மஞ்சள் இடித்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று இரவு வாணவேடிக்கையுடன் நடன நாட்டியாலயா நிகழ்ச்சி நடைபெற்றது. நாயனசெருவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை நாயனசெருவு மலையடிவார ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து இருந்தனர்.