ஏலகிரி மலையில் 14 கொண்டை ஊசி வளைவுகளில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும்
- சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
- விபத்து ஏற்படும் அபாயம்
ஜோலார்பேட்டை:
சுற்றுலா தளமான ஏலகிரி மலையில் 14 கொண்டை ஊசி வளைவுகளிலும் சோலார் மின்விளக்கு பொருத்த வேண்டும் இரவு நேரங்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு போன்று ஏலகிரி மலை மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயனிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா, படகு இல்லம், மூலிகைபண்ணை, மலை மலையேற்றம், நிலாவூர் ஸ்ரீ கதவநாச்சி அம்மன் திருக்கோயில், பறவைகள் சரணாலயம், சாகச விளையாட்டுகள், தாமரைக் குளம், உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் ஏலகிரி மலையில் அமைந்துள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பகலில் வரும் போது 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து செல்கின்றனர்.
ஆனால் இரவு நேரங்களில் மலைப்பாதை இருள் நிறைந்து காணப்படுவதால் வளைவுப் பகுதிகளை தெரியவில்லை என்றும் மழைக்காலங்களில் அவ்வப்பொழுது பனிமூட்டம் இருந்தால் வளைவு பகுதி தெரியாமல் இருப்பதாகவும் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வளைவு பகுதிகளில் மின்விளக்குகளில் இருந்தால் மலைப்பாதைகளில் விபத்துகள் தவிர்க்கலாம் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 14 கொண்டை ஊசி வளைவுகளிலும் சோலார் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.