உள்ளூர் செய்திகள்

வளையாம்பட்டு பழனி ஆண்டவர் கோவிலில் முருகர்- வள்ளி திருக்கல்யாணம்

Published On 2023-11-19 08:46 GMT   |   Update On 2023-11-19 08:46 GMT
  • சிறப்பு அபிஷேகம் நடந்தது
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பழனி ஆண்டவர் முருகர் கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று முருகர்- வள்ளி திருக்கல்யாணம் நடந்தது. இதனையொட்டி அதிகாலை மூலவருக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, இளநீர் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து முருகருக்கு பட்டு வேட்டி அம்பாளுக்கு பட்டுப்புடவை மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருமண கோலத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனைத் தொடர்ந்து தேன், தினைமாவு மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் வள்ளி திருமண மேடைக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க வள்ளி- முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மொய் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பணம் மற்றும் நகைகளை மொய் எழுதினர். மேலும் திருகல்யாணத்தில் பக்தர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News