உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் வெளுத்து வாங்கிய மழை- சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்தது

Published On 2024-10-12 09:32 GMT   |   Update On 2024-10-12 09:32 GMT
  • கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்ககூடிய சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
  • கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோலையாரில் 59 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கோவை:

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரையொட்டி கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் கனமழை கொட்டுகிறது.

நேற்றும் மழை நீடித்தது. கோவை மாநகர் பகுதிகளான ரெயில் நிலையம், காந்திபுரம், பாப்பநாயக்கன் பாளையம், காந்திபார்க், சிங்காநல்லூர், உக்கடம், குனியமுத்தூர், சுந்தராபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது. அதனை தொடர்ந்து சாரல் மழை அடித்து கொண்டே இருந்தது.

இந்த மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு மத்தியிலேயே வாகனத்தை இயக்கி சென்றனர்.

புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வடவள்ளி, தொண்டாமுத்தூர், பேரூர், சூலூர், வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழையால் கடும் குளிரும் நிலவியது. இன்று காலையும் லேசான சாரல் மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இருந்து வருகிறது.

இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்ககூடிய சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 9.82 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோலையாரில் 59 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:

சோலையார்-59, சின்னக்கல்லார்-49, சின்கோனா-42, வாரப்பட்டி பி.டபிள்யூடி அலுவலகம்-34, பெரிய நாயக்கன்பாளையம்-29, வால்பாறை பி.ஏ.பி-27, பொள்ளாச்சி தாலுகா-25, வால்பாறை தாலுகா-24, கோவை தெற்கு-22 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News