உள்ளூர் செய்திகள்

சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை

Published On 2024-08-13 08:25 GMT   |   Update On 2024-08-13 08:25 GMT
  • சுதந்திர தின விழா திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்.
  • மாநகரம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

திருப்பூர்:

சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை மறுநாள் (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கிறார்.

அதன் பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்குகிறார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ரெயில்வே போலீசார், வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து அதன்பிறகே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கிறார்கள். அதுபோல் பார்சல் பண்டல்களையும் போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். 24 மணி நேரமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் ரெயில்வே பாதுகாப்புபடை போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் மாநகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள், மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், தலைவர்களின் சிலைகள் உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விடுதிகள், லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை மேற்கொள்கிறார்கள். அதுபோல் ரெயில் தண்டவாள பாதை ரோந்துப்பணியையும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

சுதந்திர தின விழா நடைபெறும் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானம், மாநகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். போலீசாருடன் ஊர்க்காவல் படையினரும் இணைந்து பணியாற்று கிறார்கள். மாநகரம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News