திருப்பூரில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
- கூட்டம் இருந்தால் 18, 19-ந் தேதிகளில் பஸ்களை இயக்கவும் தயாராக உள்ளனர்.
- வெளியூர் சென்றவர்கள் நேற்று முதல் திருப்பூர் திரும்ப தொடங்கியுள்ளனர்.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி சென்றனர். குறிப்பாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்கள் மூலமாக தொழிலாளர்கள் புறப்பட்டனர். கடந்த 9-ந் தேதி முதல் கோவில்வழி, மத்திய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பகுதிகளில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 11-ந் தேதி இரவு கோவில்வழி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. 40 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். புதிய பஸ் நிலையத்தில் இருந்து 30 ஆயிரம் பேர், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் என 80 ஆயிரம் பேர் புறப்பட்டனர். கடந்த 9,10,11-ந் தேதிகளில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளதாக அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளியூர் சென்றவர்கள் நேற்று முதல் திருப்பூர் திரும்ப தொடங்கியுள்ளனர். இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது. நாளை (புதன்கிழமை) வரை பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கூட்டம் இருந்தால் 18, 19-ந் தேதிகளில் பஸ்களை இயக்கவும் தயாராக உள்ளனர்.