உள்ளூர் செய்திகள்

தடுப்பணை அமைக்கப்பட உள்ள பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்ட காட்சி.

கம்பிளியம்பட்டி அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.13.29 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி - அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2023-06-09 07:14 GMT   |   Update On 2023-06-09 07:14 GMT
  • அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி அளிக்கிறது.
  • தடுப்பணை அமைக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

வெள்ளகோவில் :

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் கம்பிளியம்பட்டியில் நீர்வளத்துறையின் சார்பில் ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. அப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி எம்.பி., முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது:- அமராவதி ஆறு கேரள மாநிலம் மேற்குதொடர்ச்சி மலை, மூணாறு மலைப்பகுதி மற்றும் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த ஆனைமலைப் பகுதியிலிருந்து உற்பத்தி ஆகிறது. அமராவதி ஆற்றின் குறுக்கே அமராவதி நகரில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இது காவிரி ஆற்றின் முக்கிய உபநதிகளில் ஒன்று. அமராவதி ஆறு அமராவதி அணையிலிருந்து 227 கி.மீ., பாய்ந்தோடிய பின் கரூர் மாவட்டத்தை சார்ந்த குளித்தலை வட்டம் மாயனூருக்கு அருகே திருமுக்கூடலூர் கிராமத்தில் காவிரியோடு இணைகிறது.

இந்த அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி அளிக்கிறது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தில் உள்ள கம்பிளியம்பட்டி கிராமம், குமாரசாமி கோட்டை, அணைப்பாளையம், சின்னம்மன் கோவில்பாளையம் ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீரை சேமித்து குடிநீர் ஆதாரத்தை பெருக்குவதற்காக அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் இத்தடுப்ப ணையானது அமராவதி ஆறு சரகம் 104.00 கி.மீ.,ல் கம்பிளியம்பட்டி கிராமம்அருகே அமைக்கப்படவுள்ளது.

இத்தடுப்பணையானது 170 மீட்டர் நீளத்திலும், 1.50 மீட்டர் உயரத்திலும் சுமார் 3.18மி.கன.அடி கொள்ளளவு நீரை தேக்கி வைக்க வசதியாக அமையும். இத்தடுப்பணைஅமைக்கப்படுவதால் 65 கிணறுகள் 542 ஏக்கர் விளை நிலங்கள், மற்றும் 110 ஆழ்துளைக்கிணறுகள் மூலமாக பாசன வசதி மேம்படுவதுடன், கம்பிளியம்பட்டி, சின்னம்மன்கோவில்பாளையம் ஆகிய கிராமங்களில் கால்நடை மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தியடையும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன்,மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், பொதுப்பணித்துறைசெயற்பொறியாளர் (நீர்வளத்துறை) கோபி, உதவிப் செயற்பொறியாளர் .சினீவாசன் மற்றும் இலக்கம நாயக்கன்பட்டி கிராம ஊராட்சி தலைவர் சேடன் குட்டை பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன், வெள்ளகோவில் தி.மு.க. நகர செயலாளர் சபரி எஸ், முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News