உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து திருப்பூர் தொழில் அதிபரிடம் ரூ.16 லட்சம் நூதன மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Published On 2022-08-04 07:48 GMT   |   Update On 2022-08-04 07:48 GMT
  • பேஸ்புக் மூலம் லண்டன் நாட்டை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
  • பார்சலில் உள்ள பொருளின் மதிப்பு ரூ.80 லட்சம் என்று கூறியுள்ளார்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகரம் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் கிஷோர் (40) திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழிலதிபரான கிஷோருக்கு பேஸ்புக் மூலம் லண்டன் நாட்டை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் சில நாட்களாக கிஷோருடன் பேஸ்புக்கில் எஸ்எம்எஸ் மூலம் பேச்சு கொடுத்து வந்தார். இதன்மூலம் கிஷோரும், அந்த லண்டனை சேர்ந்த நபரும் நல்ல நண்பர்களாகியுள்ளனர்.

இந்நிலையில், லண்டனை சேர்ந்த நபர் கிஷோருக்கு, லண்டன் நாட்டின் டாலர் மற்றும் நகைகளை பரிசாக அளிக்கிறேன் என்றும், அதனை பார்சல் மூலம் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய கிஷோர், லண்டனில் இருந்து பரிசு வரும் என நம்பி காத்திருந்தார். தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் கிஷோரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் டெல்லி விமான நிலையத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். தொடர்ந்து அந்த நபர், கிஷோரிடம் தங்களுக்கு வந்துள்ள பார்சல் சட்ட விரோதமானது எனவும், இந்த பார்சலில் உள்ள பொருளின் மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், இதனை பாதுகாப்பாக பெற பல லட்சம் பணத்தை செலவழிக்க வேண்டும் என கூறிகிஷோரிடம் கடந்த 2 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ரூ.16 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால், இதுவரை கிஷோருக்கு பார்சல் வந்து சேரவில்லை. இதனால் ஒருகட்டத்தில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிஷோர், இது குறித்து கிஷோர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும், உண்மையில் அந்த நபர்கள் லண்டன், டெல்லியில் உள்ளனரா? அல்லது உள்ளூரில் இருந்து கொண்டு போலியாக சமூக வலைதளத்தில் கணக்கை உருவாக்கி மோசடி செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Tags:    

Similar News