நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்த மேலும் 2 வாலிபர்கள் கைது
- மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
- திருப்பூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் ராய பண்டாரம் வீதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன். நிதி நிறுவன அதிபர். இவரது வீட்டுக்குள் கடந்த மாதம் 12-ந் தேதி மதியம் முககவசம் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் சங்கமேஸ்வரன், அவரது மனைவி, மகள் ஆகியோரை கட்டி போட்டு பணம், நகையை கொள்ளையடித்து தப்பினர்.
இது குறித்து வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அபினவ் குமார் மேற்பார்வையில் கொங்கு நகர் உதவி கமிஷனர் அணில் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் கொள்ளைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்த திருப்பூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி மருகல் குறிச்சியை சேர்ந்த வானமாமலை (வயது 22), நல்லகண்ணு (21) ஆகியோரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.