பல்லடம் அருகே வீடு புகுந்து திருடிய 2பேர் கைது
- கணவன்- மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர்.
- 7 பவுன் தங்க நகைகள், மற்றும் பணம் ரூ. 7 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் வசிப்பவர் சிவரஞ்சன். இவர் திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள தனியார் பனியன் சாயமிடும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 22-ந்தேதி கணவன்- மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர். வேலை முடிந்து மாலை திரும்பி வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ, மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தன பீரோவுக்குள் இருந்த, தங்கச் சங்கிலி, வளையல்,மோதிரம் உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகள், மற்றும் பணம் ரூ. 7 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து சிவரஞ்சன் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பல்லடம் போலீசார் நேற்று சின்னக்கரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் சிவரஞ்சன் வீட்டில் திருடிய நபர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது அவர்கள் அறிவொளிநகரைச் சேர்ந்த அர்ஜுனன்(38) ,அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் சுரேஷ்(27) என்பதும் இருவரும் கூட்டு சேர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், தொல்லை எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 பவுன் நகையை பறிமுதல் செய்து இருவரையும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.