மின் இணைப்பு முன்வைப்புத்தொகையை தனியாக செலுத்த 30 நாட்கள் கால அவகாசம்
- மின் கணக்கீடு செய்யப்பட்டடு தொகை தெரிவிக்கப்பட்டது.
- முன்வைப்புத் தொகையை செலுத்துவது என்பது அனைத்துத் தரப்பினராலும் முடியாதது.
அவினாசி :
அவிநாசி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணைப் பொதுச்செயலாளா் ஈ.பி. அ.சரவணன், மேற்பாா்வை பொறியாளா் சுமதி, கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மின்பகிா்மான வட்டப் பகுதிகளில் உள்ள மின்நுகா்வோருக்கு இந்த மாதம் மின் கணக்கீடு செய்யப்பட்டடு தொகை தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொகையை செலுத்த சென்றபோதுதான் கூடுதலாக முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்பது தெரியவருகிறது. அதிலும் மின் கட்டணத்துடன் முன்வைப்புத் தொகையை செலுத்துவது என்பது கூலித் தொழிலாளா்கள் உள்பட அனைத்துத் தரப்பினராலும் முடியாதது. ஆகவே, இணையத்தில் உள்ள இரு தொகையை செலுத்தும் குறியீட்டை மாற்றி, தனித்தனியாக செலுத்தவும், முன்வைப்புத் தொகையை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இக்கோரிக்கையை பரிசீலித்த மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் சுமதி, பொதுமக்களின் சிரமத்தை கணக்கில் கொண்டு, முன்வைப்புத் தொகையை ஜூன் 14 முதல் 30 நாள்களுக்கு தனியாக செலுத்தலாம் எனவும், வழக்கம்போல மின் கட்டணத்தை தனியாக செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.