மாநகராட்சி பகுதியில் ரூ.207 கோடியில் 402 கி.மீ சாலை சீரமைப்பு - மேயர் தினேஷ்குமார் தகவல்
- மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரமைக்கப்பட வேண்டிய சாலைகளின் விவரங்களை பட்டியலிட்டனர்
- மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு 168 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை செப்பனிடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக அதிகாரிகள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரமைக்கப்பட வேண்டிய சாலைகளின் விவரங்களை பட்டியலிட்டனர். அதன்படி சாலைப்பணிகள் செப்பனிடுவது, தார் தளம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி பகுதியில் வேகமெடுத்துள்ளது. இதுகுறித்து மேயர் தினேஷ்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:-
திருப்பூர் மாநகரில் மொத்தம் 402 கிலோ மீட்டர் தூரம் சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.207 கோடியே 44 லட்சத்து 30 ஆயிரம் நிதி அரசிடம் கோரப்பட்டது. அதற்கான நிர்வாக அனுமதி கிடைத்து டெண்டர் விடப்பட்டு படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோல் மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு 168 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டது.
இந்த பணிக்காக ரூ.228 கோடி திட்டமிடப்பட்டு அரசிடம் நிதிஉதவி கோரப்பட்டது. தற்போது முதல்கட்டமாக ரூ.40 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. அதில் ரூ.11 கோடியே 38 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.