உடுமலையில் ரூ.5 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
- கடை உரிமையாளா்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
- கடைகளில் இருந்து 75 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடுமலை:
உடுமலை நகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார ஆய்வாளா்கள் செல்வம், ஆறுமுகம், பி.செல்வம், சிவகுமாா், ராஜ்மோகன் ஆகியோா் அடங்கிய குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.
இதில் மத்திய பேருந்து நிலையம், பழனி பாதை, கல்பனா சாலை ஆகியவற்றில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளா்கள், பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடைகளில் இருந்து 75 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடை உரிமையாளா்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள கிடங்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அந்த கிடங்கில் சோதனை நடத்திய அதிகாரிகள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனா்.