5 சதவீத வட்டி மானியம் வழங்க வேண்டும் - பியோ தலைவர் வலியுறுத்தல்
- ஏற்றுமதி மறுநிதியளிப்பு திட்டத்தை மீண்டும் ரிசர்வ் வங்கி செயல்படுத்த வேண்டும்.
- ஆர்டர் அனுப்பியதும் அதற்கான பில் தொகையை பெற, கூடுதல் அவகாசம் வேண்டும்.
திருப்பூர் :
கொரோனாவுக்கு பின் வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால் வட்டி சமன்படுத்தும் திட்டத்தில், 5 சதவீத வட்டி மானியம் வழங்க வேண்டும் என்று இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அமெரிக்க டாலர் பணமதிப்பில் ஏற்றத்தாழ்வு, உலக அளவிலான பண வீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக உலக வர்த்தகம் பல்வேறு வகையில் பாதிப்பை பிரதிபலிக்கிறது. ஏற்றுமதி வர்த்தகத்தில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டாலும், 30 தயாரிப்புகளில் 15ல் மட்டுமே வளர்ச்சி கிடைத்துள்ளது.
உலக பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் சூழலில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், வரும் மாதங்கள் சவாலானதாக இருக்கும். பெட்ரோல், கச்சா எண்ணெய், உரம், நிலக்கரி இறக்குமதி காரணமாக இறக்குமதி வர்த்தக கணக்கு அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியா பல்வேறு நாடுகளுடன் போட்டியிட வேண்டியுள்ளது. வர்த்தக போட்டியை சமாளிக்க உதவியாக நிதி ஆதார நிலையை மேம்படுத்த வேண்டும்.ரெப்போ ரேட் அதிகரித்துள்ளதால், ஏற்றுமதி மறுநிதியளிப்பு திட்டத்தை மீண்டும் ரிசர்வ் வங்கி செயல்படுத்த வேண்டும்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்ததை காட்டிலும் வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால், வட்டி சமன்பாடு திட்டத்தில் கூடுதல் மானியம் வழங்க வேண்டும். பேக்கிங் கிரெடிட் மீதான வட்டி மானியத்தை 5 சதவீதம் வரை உயர்த்தி வழங்க வேண்டும்.
அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும், சந்தைப்படுத்துவதில் காலவரையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும். தேவையான வரி விலக்கு அளிப்பதன் வாயிலாக, முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டியதும் அவசியமானதாக மாறியுள்ளது.
ஆர்டர் அனுப்பியதும் அதற்கான பில் தொகையை பெற, கூடுதல் அவகாசம் வேண்டும். வர்த்தர்களிடம் பில் தொகை பெற்று வங்கி கடனை திருப்பி செலுத்த, 180 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது.அதனை 365 நாட்களாக நீட்டித்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.