திருமுருகன்பூண்டி நகராட்சியில் 90 சதவீதம் வரி வசூல் - கமிஷனர் அப்துல் ஹாரிஸ் தகவல்
- 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.
- இன்னும் 10 சதவீத வரி மட்டுமே வசூல் செய்ய வேண்டியது உள்ளது.
திருப்பூர் :
திருமுருகன்பூண்டி நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந் தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் இந்த நிதியாண்டு நிறைவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் வரிவசூலை தீவிரப்படுத்தி வருகிறது. நகராட்சி அலுவலகம் மற்றும் வரி வசூல் மையங்களில் பொதுமக்கள் தங்களது சொத்துவரி, குடிநீர் வரி, சாக்கடை கால்வாய் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருகின்றனர்.
இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய நேரத்தில் வரியை செலுத்துமாறு ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அப்துல் ஹாரிஸ் கூறுகையில், நகராட்சியில் இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 சதவீத வரி மட்டுமே வசூல் செய்ய வேண்டியது உள்ளது. இதுவரை வரி செலுத்தாதவர்கள் இன்று மாலைக்குள் வரியினங்களை செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றார்.