கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காத்திருப்பு போராட்டம்
- சுல்தான்பேட்டையில் தென்னை விவசாயிகள் கோரிக்கை மாநாடு நடந்தது.
- தென்னை விவசாயம் பிரதானமாக நடந்து வரும் சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.
பல்லடம் :
சூலூர் தாலுகா சுல்தான்பேட்டையில் தென்னை விவசாயிகள் கோரிக்கை மாநாடு நடந்தது. இந்திய விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகையர் மாநாட்டை துவக்கி வைத்தார்.
இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈசன் தலைமை வகித்து பேசியதாவது:- தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு செவி சாய்த்து கேட்பதில்லை.தேங்காய் கொள் முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். கொள்முதல் 250 கிலோவில் இருந்து 500 கிலோவாக மாற்றி அமைக்க வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதன் மூலம் எண்ணற்ற தென்னை விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
ஆனால் விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர். தென்னையில் ஏற்படும் வாடல் நோய், விலை கிடைக்காதது உள்ளிட்டவற்றால் தென்னை விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் தென்னை விவசாயம் பிரதானமாக நடந்து வரும் சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் டெல்லியில் நடந்தது போல் மாபெரும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் தமிழகத்திலும் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.