குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
- பரமசிவம் பாளையத்தில் தொடக்கப்பள்ளியில் 18 மாணவர்கள் வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள்.
- பெரும்பாலான பெற்றோர் விழிப்புணர்வு இல்லாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை.
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த பொங்கு பாளையம் ஊராட்சி, பரமசிவம் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.ஒரே வகுப்பறை, ஒரே ஆசிரியர் செயல்பட்டு வருகிறார். பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 22 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 18 மாணவர்கள் வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள். 4 பேர் தமிழ் குழந்தைகள்.பரமசிவம் பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் ஒடிசா, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் நியூ திருப்பூர், அவிநாசி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பனியன் மற்றும் அதனை சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் மட்டுமே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.பெரும்பாலான பெற்றோர் விழிப்புணர்வு இல்லாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை.பள்ளி ஆசிரியர் தாங்களே தங்கள் முயற்சியில்அவர்களது வீட்டுக்கு சென்று குழந்தைகளை கட்டாயபடுத்தி பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.
ஏழ்மை நிலையில் உள்ள பலர் வட மாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்றுகின்றனர்.விழிப்புணர்வு இல்லாததால் இவர்கள் குழந்தைகளை படிக்க வைப்பதில்லை. குழந்தைகளின் படிப்பிற்காக அரசு பல்வேறு சலுகைகளை செய்து வருகிறது.அரசு வட மாநில தொழிலாளர்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.