உள்ளூர் செய்திகள்

இந்து முன்னணி

வியாபாரிகள், அரசு அதிகாரிகளை அச்சுறுத்துவோர் மீது நடவடிக்கைஇந்து முன்னணி வலியுறுத்தல்

Published On 2023-05-02 10:58 GMT   |   Update On 2023-05-02 10:58 GMT
  • ஸ்ரீ பெரும்புதுாரில் கடந்த8 மாதத்தில், 3 பேர் வெட்டி கொல்லப்பட்டுள்ளனர்.
  • குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக முதல்வர், போலீஸ்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.

திருப்பூர்:

போலீஸ் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை மற்றும் போதையில் மூழ்கும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. சமீபத்தில், தூத்துக்குடி, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொடூரமாக கொல்லப்பட்டார். சேலம், ஓமலுார் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் கொலைவெறியோடு துரத்திய கும்பலிடம் இருந்து தப்பிக்க, போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து உயிர் தப்பினார். போதை பொருட்களால் குடும்பமே பாதிக்கப்பட்ட ஈரோடை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கீதா கலெக்டர் அலுவலகம் முன், போதைப்பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க தனிநபர் சத்தியாகிரகம் செய்துள்ளார்.

ஸ்ரீ பெரும்புதுாரில் கடந்த8 மாதத்தில், 3 பேர் வெட்டி கொல்லப்பட்டுள்ளனர். பா.ஜ.க., பட்டியலின பிரிவு மாநில பொறுப்பாளர் சங்கர் கொல்லப்பட்டார். முன் பகை என காரணம் காட்டி போலீஸ்துறை கடந்து செல்வது எந்த வகையிலும் ஏற்க கூடியதில்லை. கஞ்சா முதலான போதை பொருட்கள் நடமாட்டம் தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது.

குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக முதல்வர், போலீஸ்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். மது கொள்கையை விரிவுபடுத்தி மக்கள் நிம்மதியை கெடுக்க வேண்டாம். வியாபாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரை அச்சுறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News