உள்ளூர் செய்திகள்

மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்ற காட்சி. அருகில் கமிஷனர் கிராந்தி குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் உள்ளனர். 

திருப்பூர் மாநகர் பகுதியில் பழுதடைந்த சாலைகள் அனைத்தும் விரைவில் சீரமைக்கப்படும் - மேயர் தினேஷ்குமார் பேச்சு

Published On 2022-11-16 08:32 GMT   |   Update On 2022-11-16 08:32 GMT
  • 152 வது அரசாணை நமது காலகட்டத்தில் ஏற்க முடியாத பாவ செயல்.
  • அரசு வேலை, தூய்மை வரி வசூல் உள்ளிட்ட அனைத்தும் தனியார் வசம் என்பது மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் கிராந்தி குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் தினேஷ்குமார் பெண் கவுன்சிலர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களது வார்டுகளில் உள்ள கோரிக்கைகளை பேச அனுமதி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து 23 -வது வார்டு கவுன்சிலர் துளசி மணி பேசினார். அப்போது 23 -வது வார்டு தியாகி பழனிச்சாமி நகரில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். அங்கேரிபாளையம் ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிட வருவதில்லை. ஆகையால் பணிகள் தரமற்ற முறையில் தாமதமாக நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் தினமும் அதை பார்வையிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ம.தி.மு.க. கவுன்சிலர் சாந்தாமணி:-

38வது வார்டில் மங்களம் ரோடு குறுகளாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் பின்னர் ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து செல்வதால் பொதுமக்களுக்கு சரிவர தண்ணீர் சென்று அடையவில்லை. அதனையும் சரி செய்ய வேண்டும்.

மேலும் தெருவிளக்கு சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இருளாக காணப்படுகிறது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநகராட்சி முழுவதும் தெருநாய்கள் தொல்லை இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் தினேஷ்குமார் ,தெரு நாய்களை பிடிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. கருத்தடை செய்து ஐந்து நாட்கள் பராமரித்து அதனை உரிய முறையில் மீண்டும் அந்த இடத்தில் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இது தொடர்பாக இரண்டு கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

51 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் செந்தில்குமார் பேசுகையில்,

152 வது அரசாணை நமது காலகட்டத்தில் ஏற்க முடியாத பாவ செயல். அரசு வேலை ,தூய்மை வரி வசூல் உள்ளிட்ட அனைத்தும் தனியார் வசம் என்பது மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு அவர் வெளிநடப்பு செய்தார்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி 152-வது அரசாணையை ரத்து செய்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய போதுமான நிதி உள்ளதால் போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் தகவல் கொடுத்தால் அதனை முதலில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

4-வது கூட்டு குடிநீர் திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இன்னும் 40 மீட்டர் பணிகள் மட்டும் தான் செய்ய வேண்டியது உள்ளது. 2023ம் ஆண்டுக்குள் பெரும்பாலான சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News