வீட்டிலேயே பயோ மெட்ரிக் முறை மூலம் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு - ஓய்வூதியர்களுக்கு வாய்ப்பு
- தங்களது வாழ்நாள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால்காரர் வாயிலாக சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
- இந்த சேவைக்கு கட்டணமாக 70 ரூபாய் தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பென்ஷனர்களுக்கான வாழ்நாள் சான்று பதிவுக்கான நேர்காணல், நடைபெற்று வருகிறது.கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தலைமை கருவூல அலுவலகம் மற்றும் திருப்பூர் வடக்கு, அவிநாசி, தாராபுரம், பல்லடம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளத்தில் உள்ள சார்நிலை கருவூல அலுவலகங்களில், பென்ஷனர்களுக்கான வாழ்நாள் சான்று பதிவு நடைபெற்று வருகிறது.
கருவூலங்கள் வாயிலாக பென்ஷன் பெறுவோர், தங்கள் அருகாமையில் உள்ள கருவூலங்களுக்கு சென்று வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம். ஆதார் கார்டு, பென்ஷனர் அட்டை, வங்கி கணக்கு விவரம், ஏதேனும் ஒரு மொபைல் எண் (ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய கட்டாயமில்லை) கொண்டு சென்று, கைரேகை வைத்து பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் உள்ள மாவட்ட தலைமை கருவூல அலுவலகத்தில் வாழ்நாள் சான்று பதிவுக்காக வரும் பென்ஷனர்களுக்கு கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து மாவட்ட தலைமை கருவூல அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கருவூலங்கள் வாயிலாக பென்ஷன் பெறுவோர் 12,519 பேர் உள்ளனர். இவர்களுக்கான வாழ்நாள் சான்று பதிவு நேர்காணல் நடைபெற்று வருகிறது. தாங்கள் ஓய்வூதியம் பெறும் அருகாமையில் உள்ள கருவூல அலுவலகங்களுக்கு காலை, 10 மணி முதல் மதியம் 2 மணிக்குள் சென்று வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம். தாங்கள் ஓய்வுபெற்ற மாதத்தில் நேர்காணலில் பங்கேற்று பதிவு செய்து கொள்ளலாம். அனைத்து பென்ஷனர்களும் வருகிற 2024 மார்ச் 31ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, கடந்த ஜூலை 2022 முதல் வீட்டில் இருந்த படியே, தங்களது வாழ்நாள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால்காரர் வாயிலாக சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதற்கான புத்துணர்வு ஒப்பந்தமாக, தமிழக அரசுக்கும் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக்கும் இடையே கடந்த ஜூன் 2023 இறுதியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், ஜூலை 2023 முதல் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை போக்கும் விதமாக, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்களின் வீட்டிலேயே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக 70 ரூபாய் தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல்போன் எண், பி.பி.ஓ., எண், மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்த பின் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும்.கடந்தாண்டு சுமார் 1.75 லட்சம் ஓய்வூதியதார்கள் வீட்டிலிருந்த படியே தங்களின் வாழ்நாள் சான்றிதழை தபால்காரர் வாயிலாக சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
எனவே ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் இந்த வசதியை பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே, தங்களது தபால்காரர்களிடம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.