பொய் வழக்கில் கணவனை கைது செய்ததாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
- லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கடந்த 10 தினங்களுக்கு முன்பாக திருப்பூர் வடக்கு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
திருப்பூர்:
திருப்பூர் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவர் அப்பகுதியில் உள்ள கோவில் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கடந்த 10 தினங்களுக்கு முன்பாக திருப்பூர் வடக்கு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் கணவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட தினமே தனசேகரின் மனைவி ஜான்சி மற்றும் உறவினர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த தனசேகரனின் மனைவி ஜான்சி கணவர் மீது தொடர்ந்து பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் இதனால் தனது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.