கலைஞர் மகளிர் உரிமை திட்டம் 4,20,196 விண்ணப்பங்கள் பதிவு - அமைச்சர் தகவல்
- மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பபதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
- டோக்கன்களையும் அந்தந்த பகுதியை சார்ந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கினர்.
காங்கயம்:
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பதிவு மையத்தினை ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பபதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 24.7.2023 முதல் 4.8.2023 வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1 மற்றும் மண்டலம்-2 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 265 ஊராட்சிகளில் முதற்கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று சுமார் 3,88,687 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அந்த வகையில் இரண்டாம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் தொடங்கப்பட்டு 31,509 விண்ணப்பங்கள் பெறப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் 24.7.2023 முதல் 5.8.2023 வரை 4,20,196 கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து இன்று 6.8.2023 முதல் 16.8.2023 வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30வார்டுகளிலும், 6 நகராட்சி பகுதிகளிலுள்ள 147 வார்டுகளிலும் மற்றும் 15 பேரூராட்சிகளுக்குட்பட்ட 233 வார்டுகளிலும் இரண்டாம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இந்த விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை அருகில் உள்ள அரசுஅலுவலக கட்டடங்கள், சமுதாய நலக்கூடங்கள் மற்றும் பள்ளிகளில் விண்ணப்பபதிவு முகாம்கள் நடைபெறும். இரண்டாம் கட்டமாக நடைபெறும் முகாம்களுக்கு 1.8.2023 முதல் 4. 8.2023 வரை ஆகிய நான்கு நாட்கள் விண்ணப்பப்படிவம் மற்றும் டோக்கன்களையும் அந்தந்த பகுதியை சார்ந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கினர்.
இந்த டோக்கன்களில் டோக்கன் நம்பர், நாள் மற்றும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மையத்திற்கு வர வேண்டும் எந்த நாளில் வரவேண்டும் என்று டோக்கன்களில் எழுதப்பட்டு வழங்கப்படும். குறிப்பிடப்பட்ட அந்த மையத்திற்கு அந்த நாள் அந்த நேரத்திற்கு வந்தால் போதுமானது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பழனியப்பா திருமண மண்டபம், ராஜாஜி வீதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பகுதிகளில் நடைபெற்ற கலைஞர் உரிமைத்திட்டம் விண்ணப்பம் பதிவு மையத்தினை அமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் வட்டாட்சியர் புவனேஸ்வரி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.