வரத்து குறைவால் சாம்பல் பூசணி விலை உயர்வு
- இரு சீசன்களில் சாம்பல் பூசணி சாகுபடி செய்யப்படுகிறது
- அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது.
மடத்துக்குளம் :
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக இரு சீசன்களில் சாம்பல் பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த தண்ணீரில் இச்சாகுபடியை மேற்கொள்ள முடியும் என்பதால் முன்பு தாந்தோணி, துங்காவி, சின்னப்பன்புதூர், மலையாண்டிகவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களில் சாம்பல்பூசணி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது.
ஆனால் கடந்தாண்டு போதிய விலை கிடைக்கவில்லை.கிலோ 1 ரூபாய் அளவுக்கு விலை சரிந்ததால் காய்களை அறுவடை செய்யாமல் விளைநிலங்களிலேயே அப்படியே விடும் நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த சீசனில் சாம்பல்பூசணி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் அதிக வெயில் காரணமாக நடவு செய்த விதைகள் போதிய அளவு முளைவிடவில்லை.
இவ்வாறு பல்வேறு காரணங்களால் உற்பத்தி குறைந்த நிலையில் தேவை அதிகரிப்பால் தற்போது சாம்பல்பூசணி கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. உள்ளூர் சந்தையில் கிலோ 10-15 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.கேரள வியாபாரிகள் உடுமலை பகுதிக்கு நேரடியாக வந்து சாம்பல் பூசணியை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் விலை மேலும் உயர்ந்து வருகிறது.விவசாயிகள் கூறுகையில், சாம்பல் பூசணி சாகுபடியில், நோய்த்தாக்குதலால் மகசூல் குறைந்துள்ளது. கடந்தாண்டு விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டது. கேரளாவில் உணவில் மட்டுமல்லாது மருந்துகள் தயாரிப்புக்கும், சாம்பல்பூசணியை பயன்படுத்துகின்றனர். எனவே அம்மாநிலத்துக்கு அதிக அளவு காய்களை கொள்முதல் செய்கின்றனர் என்றனர்.