பல்லடம் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி-பரபரப்பு
- மீனாம்பாறை பகுதியில் சுமார் 40 சென்ட் பரப்பளவில் அரசு நிலம் உள்ளது.
- பட்டா வழங்கும் வரை யாரும் இடத்தை ஆக்கிரமிக்க கூடாது.
பல்லடம், செப்.22-
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி மீனாம்பாறை பகுதியில் சுமார் 40 சென்ட் பரப்பளவில் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நேற்று மீனாம்பாறை மற்றும் அவரப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூடாரம் அமைத்து ஆக்கிரமிக்க முயன்றனர்.இது பற்றி தகவல் அறிந்து வந்த பல்லடம் வருவாய் ஆய்வாளர் அனிதா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் பொதுமக்கள் காலி செய்ய மறுத்தனர். அப்போது வருவாய் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆய்வுக்குப்பின் பட்டா வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். ஆக்கிரமிப்புகளை நீங்களே அகற்றிக் கொள்ளுங்கள். இல்லையெனில் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும். பட்டா வழங்கும் வரை யாரும் இடத்தை ஆக்கிரமிக்க கூடாது.
மீறினால் கம்பி வேலி அமைத்து இடத்தை பாதுகாப்பதுடன் பொது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.