இணையதளம் மூலம் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும் - மாணவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்
- மாணவ மாணவிகள் பலரும் செல்போன்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
- செல்போனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம்.
திருப்பூர் :
திருப்பூர் காந்திநகர் அருகே உள்ள ஏ.வி.பி. பள்ளியில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நவீன காலத்திற்கு ஏற்ப செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக மாணவ மாணவிகள் பலரும் செல்போன்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். நாம் செல்போனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். நமது தேவைகளுக்கு மட்டும் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு இணையதளம் மூலமாக தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தங்களது செல்போன் எண்களை கொடுக்கக் கூடாது. மாணவிகள் தெரியாத நபர்களை நம்பி புகைப்படங்களை அனுப்பக்கூடாது. அவ்வாறு புகைப்படங்களை அனுப்பினால் அவை தவறாக பயன்படுத்தக்கூடும் வாய்ப்புள்ளது. எனவே மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தேவைக்கு மட்டும் செல்போன்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோல் வீடுகளில் உள்ள தங்களது பெற்றோர்களிடமும் தற்போது நடந்து வருகிற மோசடிகள் குறித்து தெரிவிக்க வேண்டும். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏடிஎம் அட்டை எண்களை பெறுகிறவர்கள், நமக்கு தெரியாமலே பணத்தை எடுக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம், வங்கி விவரங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டால் தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சையது ரபிக் சிக்கந்தர், வடக்கு மகளிர் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கனகவல்லி மற்றும் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினர்.