பல்லடம் அருகே 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
- கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
- கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சொந்த செலவில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
பல்லடம் :
பல்லடம் அருகே,100கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. பல்லடம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், கணபதி பாளையம் ஊராட்சி ஆகியவை இணைந்து 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் சவுடேஸ்வரி அம்மன் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இலபத்மநாபன், முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தம்பதியினர் ரூ.1 லட்சம் சொந்த செலவில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர்.
கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசையாக வளையல்கள், புடவை, தட்டு, பூ, மஞ்சள், குங்குமம், மற்றும் 5 வகையான உணவுகளுடன் மதிய விருந்து வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் மூலம் ஊக்கத் தொகை ரூ.18 ஆயிரம், ரூ 2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம், ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் சுகாதாரத் துறையால் கர்ப்ப கால முன்பின் பராமரிப்பு முறைகள், குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகள் ,குழந்தை வளர்ப்பு தடுப்பூசிகள் போன்ற பல தகவல்கள் கர்ப்பிணி பெண்களுக்கு எடுத்துக் கூறப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா, ஒருங்கிணைப்பாளர்கள் துளசிமணி,கவிதா, பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கோவிந்தசாமி, ஈஸ்வர மகாலிங்கம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துக்குமார், வார்டு கவுன்சிலர்கள் ரவி தண்டபாணி, ருக்மணி வீரப்பன், தி.மு.க. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ரத்தினசாமி, கீர்த்தி சுப்பிரமணியம்,ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சின்னப்பன், மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.