அவிநாசி கோவிலில் 23ம் தேதி பாலாலய பூஜை
- ஐந்து நிலை ராஜகோபுரத்துக்கு வண்ணம் தீட்டும் வேலை நடைபெற்று வருகிறது.
- சன்னதிகளின் விமானங்களுக்கு பாலாலய பூஜை நடக்கிறது.
அவினாசி:
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பரிவார சன்னதிகளுக்கு,23ம் தேதி பாலாலயம் நடக்கிறது.கொங்கேழு சிவஸ்தலங்களில் முதன்மையான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், வரும் 23ம் தேதி மாலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள், பரிவார சன்னதி விமானங்களுக்கு பாலாலயம் நடைபெறுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன், கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவங்கி, கருணாம்பிகை அம்மன் சன்னதியின் ஐந்து நிலை ராஜகோபுரத்துக்கு வண்ணம் தீட்டும் வேலை நடைபெற்று வருகிறது.
பரிவார சன்னதிகளான செல்வவிநாயகர், வீரபத்ரர், பாதிரி மரத்து அம்மன், சிவசூரியன், தட்சிணா மூர்த்தி, கன்னிமூல கணபதி, பஞ்சபூ தலிங்கம், மகாலட்சுமி, செந்தில் ஆண்டவர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், நடராஜர், பாலதண்டாயுதபாணி, நிருருதி விநாயகர், சண்டிகேஸ்வரி, துர்க்கை அம்மன் ஆகிய சன்னதிகளின் விமானங்களுக்கு பாலாலய பூஜை நடக்கிறது. இதில், ஆதீன கர்த்தர்கள், அறநிலையத்துறையினர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.